தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi: கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்.. விசாரணை அதிகாரி நியமனம் முதல் கைது வரை - முழு விபரம்

Kallakurichi: கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்.. விசாரணை அதிகாரி நியமனம் முதல் கைது வரை - முழு விபரம்

Karthikeyan S HT Tamil
Jun 20, 2024 09:11 AM IST

Kallakurichi Illicit liquor: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 34 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Kallakurichi: கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்.. விசாரணை அதிகாரி நியமனம் முதல் கைது வரை - முழு விபரம்
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்.. விசாரணை அதிகாரி நியமனம் முதல் கைது வரை - முழு விபரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 116 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆட்சியர் பேட்டி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கள்ளக்குறிச்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "உயிரிழந்தவர்களின் உடல்களை துரிதமாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க திருச்சி, சேலம் மருத்துவமனைகளில் இருந்து கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு சிறுநீரக பாதிப்பு என உள் உறுப்பு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பதற்றத்தைத் தணிக்க மாவட்டம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 34 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

'கள்ளக்குறிச்சி விரைகிறேன்' - ஈபிஎஸ்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

3 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 900 லிட்டர் விஷசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ‘மெத்தனால்’ விற்பனை செய்த சின்னத்திரை என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9