Palani : தைப்பொங்கல் -பழனியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
பழனியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்து மலைக்கோயிலுக்கு படியேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு தைப்பூசத்துக்கு முன்னதாக தைப்பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடிப்பாடி பழனி வந்து கிரிவலம் சென்றனர்.
முருக பக்தர்கள் மட்டுமன்றி ஏராளமான ஐயப்ப பக்தர்களும் சுவாமி தரிசனத்துக்காக மலைக்கோயில் வந்திருந்தனர். அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. படிப்பாதை மட்டுமன்றி வின்ச் மற்றும் ரோப்காரிலும் பக்தர்கள் மலைக்கு செல்ல காத்திருந்தனர்.
மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை மற்றும் இலவச தரிசன வரிசைகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அன்னதானத்துக்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் எந்த வரிசை எங்கு செல்கிறது என தெரியாமல் பக்தர்கள் திண்டாடினர்.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரமானது. தமிழ் மாதப்பிறப்பை முன்னி்ட்டு அருள்மிகு ஆனந்த விநாயகருக்கு சிறப்பு தனூர் யாகபூஜை நடத்தப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.
பொங்கல் திருவிழா கூட்டம் காரணமாக கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்