Thillaiyadi Valliammai: தீரம் மிக்க தில்லையாடி வள்ளியம்மை…
ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரம் மிக்க போராட்டம் நடத்தி, இளம் வயதிலேயே உயிர்த்தியாகம் செய்த தில்லையாடி வள்ளியம்மை பிறந்த மற்றும் இறந்த தினம் இன்று. அவரது வாழ்க்கை போராட்டம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த உலகில் 16 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த ஒரு பெண்ணை நாம் 125 ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்றால், அவர் எவ்வளவு பெரிய செயற்கரிய செயல்களை செய்திருப்பவராக இருந்திருக்க முடியும். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயிர்நீத்த முதல் விடுதலை போராளி என்ற பெருமையைப் பெற்ற பெண் தில்லையாடி வள்ளியம்மை தான். அவர் இந்தியாவை அதிலும் நமது தமிழகக்தைச் சேர்ந்தவர் என்றால், அது நமக்கு எவ்வளவு பெருமையான ஒன்று
ஆம், 125 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் பிறந்தார். ஆங்கிலேயர் தென்னப்பிரிக்காவில் தங்கள் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திக்கொண்டிருந்த காலம் அது. தென்னாப்பிரிக்காவில் பயிர்த்தொழில் செய்யத் தெரிந்தவர்களை வெள்ளையர்களை தேடியலைந்துகொண்டிருந்தார்கள். ஏனெனில், அங்கிருந்த நீக்ரோக்கள் ஆங்கிலேயர்களோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள், இந்தியா போன்று தனது ஆக்கிரமிப்பில் ஏற்கனவே உள்ள நாடுகளில் இருந்து கூலித்தொழிலாளர்களை இறக்குமதி செய்துகொண்டிருந்த காலம் அது.
அப்படி ஒரு கூலித்தொழிலாளியாகத்தன் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியிலிருந்து சென்றவர்கள் முனுசாமியும், மங்களமும். அவர்களுக்கு பிறந்த வீரப்பெண்மணிதான் வள்ளியம்மை. அங்கு அவரது தந்தை சிறு வியாபாரத்தை துவக்கினார்.
அங்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்று சென்ற ஏராளமான இந்தியர்கள் அங்கும் அடிமையாக நடத்தப்பட்டார்கள். வாழ்வதற்கு வரி, சர்ச்களில் செய்த திருமணங்கள்தான் செல்லும், ஆங்கிலேயர்களுடன் சமமாக அமர்ந்து பயணிக்க முடியாது, வாக்குரிமை இல்லை. அனுமதியின்றி சில இடங்களுக்குச் செல்ல முடியாது என்று அங்கிருந்து இந்திய மக்கள் வாழும் இடங்கள் சேரிகள் போல் காட்சியளித்தன. அதனால் அங்கு சுகாதார வசதியின்றி நோய்களும் பரவின.
1893ம் ஆண்டு தாதா அல்துல்லா கம்பெனிக்கான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிப்பதற்காக காந்தி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கே இந்தியர்களின் நிலை கண்டு வருந்தினார். அங்குள்ள இந்தியர்களின் உரிமைக்காக போராடினார்.
அப்போதுதான் தென்ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றம் கிறிஸ்தவ முறைப்படியும், திருமணப்பதிவாளர் சட்டப்படியும் செய்த திருமணங்கள் மட்டும் செல்லும், மற்றவை செல்லாது. அவர்கள் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த இந்திய வம்சாவளியினர் போராட துவங்கினர். காந்திஜி அவர்களை ஒன்றிணைத்தார்.
அதனையொட்டி, நடந்த பொதுக்கூட்டங்களில் அவரது தாயுடன் சென்ற சிறுமி வள்ளியம்மையும் காந்தியின் சொற்பொழிவுகளை கேட்டு விடுதலை வேட்கை கொண்டார்.
புதிதாக இந்தியர்கள் குடியேறுவதை தடுக்க அங்கிருந்த இந்தியர்களின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வள்ளியம்மையும் காந்தியுடன் தன்னை போராட்டத்தில் இணைத்துக்கொண்டார். அதுவரை பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தாத காந்திஜி இப்போது பெண்களை இணைத்துக்கொண்டதற்கு காரணம், இச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால்தான்.
1913ம் ஆண்டு ஜோகனஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரக போர்ப்படையில் முதல் வரிசையில் வள்ளியம்மை, அவரது தாயார் மற்றும் கஸ்தூரிபா ஆகியோர் நின்றனர். இந்த ஊர்வலம் நியூகாசில் நகருக்கு, டர்பன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கடந்து சென்று அங்குள்ள சுரங்கத்தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்ய வைத்து டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். பதினாறு வயதான சிறுமி வள்ளியம்மையும் சிறை சென்றார். மூன்று மாதக்கடுங்காவலில் இருந்த அவரை அங்கு சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினார்கள். சிறையிலோ சுகாதார கேடான சூழல். சிறை அறையில் உள்ள மண் சட்டியில்தான் மலம், சிறுநீர் கழிக்க வேண்டும். காலையில் அதை அகற்றிவிட்டு, சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ வசதியும் இல்லை.
இதனால் சிறுமியான வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். அபராதம் செலுத்திவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச்செல்ல வற்புறுத்தப்பட்டார். ஆனால், வள்ளியம்மை செத்தாலும் சிறையிலே சாவேன் என்று கூறிவிட்டார். கடுமையான உடல் நலக்குறைபாட்டுக்கு ஆளான வள்ளியம்மையில் நிலை கவலைக்கிடமானது. இதனால் தண்டனைக்காலம் முடியும் முன்னரே 1914ம் ஆண்டு பிப்ரவரி 11ம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்த வள்ளியம்மையை ஜமுக்காளத்தில் கிடத்தி வீட்டுக்கு சுமந்துதான் சென்றனர். பத்தே நாளில் 22.02.1914 அன்று பிறந்த நாளிலே அந்த விடுதலை சுடர் ஓய்ந்தது. அந்த தியாக தீபம் அணைந்தது.
காந்தி எப்போதும் நினைவுகூறும் பெண்ணாகவே தில்லையாடி வள்ளியம்மை இருந்துள்ளார். இந்திய மற்றும் தமிழ் பெண்கள் ஒவ்வொருவருக்கும் அவர் தன்மான உணர்வை ஊட்டிவிட்டு சென்றுள்ளார் என்பதை இந்நாட்டின் பெண்கள் ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
டாபிக்ஸ்