Weather Update : மக்களே.. தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோகா" புயலானது நேற்று (மே 11) மாலை 1730 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0530 மணி அளவில் மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று (மே 12) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.05.2023 முதல் 16.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.05.2023 முதல் 16.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
14.05.2023 முதல் 16.05.2023 : ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகிறது. நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மதுரையில் மூன்று மாவடி ரிசர்வ் லைன் ஐயர் பங்களா, தல்லாகுளம் சின்ன சுக்கி குளம் கோரிப்பாளையம் அண்ணா பேருந்து நிலையம் சிம்மக்கல் குருவிக்காரன் சாலை விரகனூர் ரிங் ரோடு வண்டியூர் அனுப்பானடி போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பயங்கரமான இடி மின்னல் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது.
தேனி மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து கொண்டே உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்