காதலுக்கு நோ! கத்தியால் குத்திய இளைஞர்! அரசுப்பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமணி, இவருக்கு 26 வயதாகிறது. இவர் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை என்ற பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ஆவார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வத்தின் மகன் மதன் (30)பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் மதனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என ரமணி தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த மதன் இன்று மல்லிப்பட்டினம் பள்ளிக்கு சென்று ஆசிரியர் ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த அவரை சக ஆசிரியர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொன்று சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆசிரியர் ரமணி வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். மேலும் இதனையடுத்து மதன் மீது சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியையை கத்தியால் தாக்கி கொலை செய்த காரணத்தால் மதனைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிர்ச்சியில் தமிழகம்
அரசுப் பள்ளியினுள்ளே இது போன்ற கொலை நடந்துள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆகியோர் ஆளும் திமுகவின் அலட்சியமே இந்த கொலைக் குற்றத்திற்கு காரணம் எனவும் தெரிவித்து வருகின்றனர். இது பள்ளிக்கல்வித்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடுமையான நடவடிக்கை
இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்தான அவரது டிவிட்டரில், "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்