TN Government: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
ஆவின் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்துவதன் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஆவின் நிறுவனம் 3.87 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.