Pongal 2023: போலீசாரின் குடும்பங்களுடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Celebrates pongal with police personnel: வெயில் மழை என்று பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழா்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை பொங்கல் விழா களைகட்டி இருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டான கபடி, உறியடி, கயிறு இழுத்தல், இளவட்ட கல் துாக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவல்துறையினர் குடியிருப்பில், காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
கொண்டித் தோப்பு காவலர்கள் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில், காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தார். மேலும், அங்கு சமைத்துக்கொண்டிருந்த பொங்கல் பானையில் பொங்கலைக் கிண்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். காவலர்கள் குடியிருப்பில், காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவினை கொண்டாடியதோடு, அவர்களுடன் குழுப் புகைப்படம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துக்கொண்டார். மேலும், அவர்களுக்கு பொங்கல் பரிசுகளையும் அவர் வழங்கினார்.
இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெயில் மழை என்று பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிகழ்வில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.