தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்.. புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கிலேயே பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
இம்முறையும் மின்னணு வடிவில் இ-பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்து செய்யப்பட்டுள்ளன.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு நடைமுறைக்கு வராமல் உள்ள பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என தெரிகிறது. குறிப்பாக, தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை ஆகியவை முக்கிய அறிவிப்புகளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுதவிர, பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், பிற்பகல் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவை தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதேபோல் தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பல்வேறு சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை கடந்த ஆகஸ்ட்14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.