தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Stalin Urges Central Government Permit To Travel Point For Haj Pilgrims From Chennai

சென்னையிலிருந்து ஹஜ் புனிதப் பயணம்..மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Karthikeyan S HT Tamil
Mar 17, 2022 08:45 PM IST

சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர், சென்னையிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2022-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமென்று கோரி இந்தியப் பிரதமருக்கு 11-11-2021 ஆம் நாளன்று எழுதியுள்ள கடிதத்தின் மீது, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விழைவதாகக் குறிப்பிட்டு, ஒவ்வோராண்டும் தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 4,000-க்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர் என்றும், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் பயனடையும் வகையில் சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும், 1987-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நேரடி ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4,500-க்கும் மேற்பட்டோர், தங்களது ஹஜ் புனிதப் பயணத்தினை சென்னையில் இருந்து தொடங்கினர் என்றும், இந்தச் சூழ்நிலையில், இந்திய ஹஜ் குழு, கரோனா பெருந்தொற்று காரணமாக, ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை 21-லிருந்து 10-ஆகக் குறைக்கப்பட்டதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்களது புனிதப் பயணத்தை கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தொடங்கிட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளதை முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர், கொச்சிக்குச் சென்று பயணத்தைத் தொடங்குவதால், 700 கிமீக்கு மேல் கூடுதலாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளதோடு, பல சிரமங்களையும், கூடுதல் செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், தற்போது சவூதி அரேபிய அரசு பல நாடுகளிலிருந்து புனிதப் பயணமாக வருவோருக்கு கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நிலையில், ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக இஸ்லாமிய சமூகத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு, 2022-ம் ஆண்டு, அவர்கள் சென்னையிலிருந்து தங்களது ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுமாறு மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp channel