Thiruchendur Soorasamharam: திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்
மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோார் பங்கேற்றனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி மிகவும் எளிமையான முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதால் வழக்கம் போல் கந்தசஷ்டி திருவிழா களைகட்டியது. இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விஸ்வரூப தீபாராதனை நடந்தது. கந்த சஷ்டி திரு விழாவின் 5ஆம் நாளான நேற்று அதிகாலை வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து கந்த சஷ்டியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோலாகமாக திருச்செந்தூரில் நடைபெற்றது. இதற்காக மாலை 4 மணியளவில் ஜெயந்திநாதர் கடற்கரைக்கு வருகை புரிந்தார். பின்னர் முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். 2-ஆவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். அப்போது கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 3000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் சிறப்பு பேருந்துகளுக்கான வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
டாபிக்ஸ்