Thiruvengadam Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்டர்.. திமுக அரசின் நாடகம் - சீமான் கடும் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thiruvengadam Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்டர்.. திமுக அரசின் நாடகம் - சீமான் கடும் கண்டனம்!

Thiruvengadam Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்டர்.. திமுக அரசின் நாடகம் - சீமான் கடும் கண்டனம்!

Karthikeyan S HT Tamil
Jul 14, 2024 01:27 PM IST

Thiruvengadam Encounter, Seeman: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Thiruvengadam Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்டர்.. திமுக அரசின் நாடகம் - சீமான் கடும் கண்டனம்!
Thiruvengadam Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்டர்.. திமுக அரசின் நாடகம் - சீமான் கடும் கண்டனம்!

"பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை சிறைவாசி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை சிறைவாசியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத் திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகச் சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.

உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.

தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

என்கவுண்டர் எனும் பெயரில், விசாரணை சிறைவாசிகளைக் கொலைசெய்வதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீதான மக்களின் கோபத்தையும், ஆளும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியையும் மட்டுப்படுத்த வேண்டுமானால் என்கவுண்டர்கள் உதவலாமே ஒழிய, அது ஒருநாளும் குற்றத்துக்கான முழுமையானத் தீர்வில்லை.

ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணை சிறைவாசி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." என்று சீமான் தெரிவித்துள்ளார்.

போலீசார் கூறிய பரபரப்பு தகவல்கள்

கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை, விசாரணைக்காக போலீசார் இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும் போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை தேடும் போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருந்துள்ளார். போலீசார் சுற்றி வளைக்கும் போது, ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார்.இதனை அடுத்து காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. மாதரவத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டாயில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.