Vengai Vayal Issue : இது திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு - சீமான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vengai Vayal Issue : இது திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு - சீமான்!

Vengai Vayal Issue : இது திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு - சீமான்!

Divya Sekar HT Tamil
Jan 17, 2023 11:52 AM IST

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம் தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான்

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி, வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது. தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை புரிந்த குற்றாவாளிகளைகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

துப்பறிய கடினமான அரிதான கொடுங்குற்ற வழக்குகளை மட்டும், விரைந்து விசாரணை நடைபெற வேண்டி குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றிய நிலைமாறி, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்கும் வகையில் உணர்வுப்பூர்வமான வழக்குகள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி கிடப்பில் போடுவதென்பது வழக்கமாகிவிட்டது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிவேண்டி மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியவுடன், போராட்ட எழுச்சியை மட்டுப்படுத்துவதற்காக வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. ஆனால் இன்றுவரை மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு கிடைத்த நீதியென்ன? வழக்கின் நிலையென்ன? விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? எதுவுமில்லை. அதைப்போலவே தற்போது வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினையும், கிடப்பில் போட்டு குற்றவாளிகளை தப்புவிக்க செய்யும் முயற்சியே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாகும்.

தங்களால் கண்டறிய முடியவில்லை என்று ஒப்புக்கொள்ளும் வகையில், காவல்துறை ஆணையரே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றுவதாக கூறுவது, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலைமைச்சர் அவர்களின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட அவமானமில்லையா? தலைகுனிவில்லையா? முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் திமுக அரசு அமைத்த சமூகநீதி கண்காணிப்பு குழு வேங்கைவயல் கிராமத்தில் செய்த விசாரணை என்ன? நடத்திய ஆய்வு என்ன? கொடுத்த அறிக்கை என்ன? அதன்பெயரில் எடுத்த நடவடிக்கை என்ன? இதுதான் 60 ஆண்டுகாலமாக திராவிடம் தமிழர் மண்ணில் கட்டிக்காத்த சமூகநீதியா?

ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்த சமூகவிரோதிகளைக்கூட கைது செய்ய முடியாத திறனற்ற திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு என்றுதான் இனி அழைக்க வேண்டும். ஆகவே, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை என்ற பெயரில் வேங்கைவயல் தீண்டாமைக்கொடுமை வழக்கினை தமிழ்நாடு அரசு மேலும், மேலும் காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.