Naam Tamilar: 'ஆட்சியாளர்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக செயல்படுகின்றனர்' - சீமான்
முதலமைச்சரும் பிரதமரும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக செயல்படுகின்றனர் என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது.
அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘’ என்னுடைய உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற தாய்த்தமிழ் உறவுகளே. உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
இது டிசம்பர் மாதத்தில் நடத்தியிருக்க வேண்டிய பொதுக்குழு கூட்டம். மழை வெள்ளத்தால் சென்னை - தூத்துக்குடி மாவட்டங்களில் களப்பணியில் ஈடுபட்டதால் நடத்தமுடியவில்லை.
அழைப்பு சிலருக்குச் செல்லவில்லை என்றால் வருத்தப்படக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் புரட்சியாளர்கள்போல் செயல்படவேண்டும். இது பொதுக்குழு கூட்டம் என்பதால் சாதாரணமாக முடித்துவிட்டு போய் மதியம் சாப்பிடலாம். இது போர்க்களம். போர்க்களத்தில் சண்டைசெய்துகொண்டு இருப்பவர்கள் பொறுங்கப்பா.. கொஞ்சநேரம் சாப்பிட்டு வந்துவிடுகிறேன் எனச் சொல்லமுடியாது. அது மரபும் அல்ல. வாய்ப்பும் அல்ல. நாம் எதிர்கொள்ள உள்ள 2024 மற்றும் 2026ஆகிய தேர்தல்கள் தமிழ்ப் பேரினத்திற்கே அவசியமான தேர்தல்.
இங்கே சில வரையறைகள். நாம் தமிழர் கட்சி கிளைகள் இல்லாத நிலையை உருவாக்குவோம். நான் கட்சியில் இருக்கிறேன் மகிழ்ச்சி. என்னால் எத்தனைபேர் கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் வளர்ச்சி. ஒரு வாக்கு அகத்திற்கு 8-10 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இனி அதை நீங்கள் செய்து தான் ஆகவேண்டும். அவரவர் தங்கள் வாழ்விடத்தை நாம் தமிழர் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள். இந்த கோட்டையைத் தொடுவது எளிது. நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். ஹிந்தி ஒழிக என்பதை விட, தமிழ் வாழ்க என சொல்ல வேண்டும். இன்னொருவரின் தாய் மொழியை அழிப்பது என் வேலையல்ல. என் தாய்மொழியை காப்பதே என் கடமை.
திராவிடம் ஒழிக எங்கள் கோட்பாடு அல்ல. தமிழ்த்தேசியம் எழுக; வெல்க என்பதுவே என் கோட்பாடு. மற்றவன் தோற்க வேண்டும் என்று பணிசெய்யாதே; நாம் எப்படி ஜெயிக்கவேண்டும் என்பதனை நினைத்து பணி செய்யவேண்டும். அதுதான் நம் கோட்பாடாக இருக்க வேண்டும். மண்ணை வெல்வதற்குமுன், மக்களின் மனதை வெல்லவேண்டும்.
நாம் மழைவெள்ளத்தில் களப்பணியாற்றியபோது நம்மைப் பற்றிய செய்திகள் வரவில்லை என பலர் வருந்தினர். நம் விளம்பரத்திற்காக வேலை செய்யவில்லை; விரும்பிசெய்கிறோம். இது நம் கடமை. அதன் வழியில், செயல்படவேண்டும். தாய் அன்பைத்தாண்டிய பேரன்புடன் செயல்படும் தகுதி உள்ளவன் எவனோ, அவனே நாம் தமிழர் கட்சியின் முதன்மைத் தளபதியாக வலம் வரமுடியும். புரட்சியாளர்கள் எல்லோரும் ஒரே தத்துவத்தின் கீழ் பணி செய்தவர்கள் தான்.
நம்மை சிலர் பயமுறுத்துவர். கூட்டணி வைக்காதபோது நம்மை விமர்சித்தவர்கள், இப்போது பாராட்டுகிறார்கள். அதற்கான நல்லமுடிவு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெரியும். தோற்று தோற்று வென்றவரின் மனது இரும்பினும் கடினமாய் இருக்கும். என் அன்பு உடன்பிறந்தாரே உங்கள் மனது இரும்பினும் கடினமானதாய் இருக்கவேண்டும். நாம் வெல்லுவோம். நம்பிக்கையோடு இருப்போம்.
உங்கள் அப்பா முதலமைச்சரா?. இல்லை சாதி, மதத்தைச் சொன்னீர்களா?.இல்லை. நீ உன் இனத்தின் கல்லறையில் பிறந்தவன். நீ உன் இனத்தின் ஒப்பாரியில் வளர்ந்தவன். உன்னையும் என்னையும் இறுகப்பிணைத்து வைத்திருப்பது தமிழும் நம் தலைவர் பிரபாகரனும்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றது எல்லாம் அதானி, அம்பானி. அம்பானி சொல்கிறார் தொழில் செய்ய ஏற்ற இடம் தமிழ்நாடு. ஏனென்றால், இங்குதானே நிலத்தைப் பறிக்கலாம். அதைக் கேட்கும் விவசாயி மீது குண்டாஸ் போடலாம். அவனுடைய பொருட்களை எடுத்துக்கொள்ள எட்டுவழிச்சாலை போடலாம். இவர்கள் முதலமைச்சர், பிரதமர் அல்ல. ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். இவர்களை வைத்து ஒன்றும் செய்யமுடியாது’’ என கடுமையாக விமர்சித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்