Seeman: மதுரை தமுக்கம் அரங்குக்கு ராணி மங்கம்மாள் பெயர் சூட்ட சீமான் எதிர்ப்பு
மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே சூட்ட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: மதுரையில் ஏற்கெனவே ஒரு கலையரங்கம் உட்படப் பல்வேறு இடங்களுக்கு ராணி மங்கம்மாள் பெயர் சூட்டப்பட்டு நினைவுகூரப்படும் நிலையில் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்திற்கும் அவருடைய பெயரையே வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கத்தினை இடித்துவிட்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்திற்கு, மீண்டும் அவரது பெயரை வைக்காமல் ராணி மங்கம்மாளின் பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆதித்தமிழ்க் குடியான முடிதிருத்தும் மருத்துவர் குடியில் பிறந்த ஐயா தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தனது அயராத முயற்சியாலும், அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினாலும் தமிழ் நாடகத் தலைமையாசிரியராக உயர்ந்தவர். கலையின் மீதிருந்த தீராத காதலினால் தம் வாழ்வையே அதற்காக அர்ப்பணித்தவர். தெருக்கூத்து மரபிலிருந்து தமிழ் நாடகக்கலையை அரங்கமைத்து மேடையேற்றிய பெருந்தகைகளில் முக்கியமானவர். பாடல்கள் இயற்றவும், இசையுடன் பாடவும், வேடமேற்று நடிக்கவும் என முத்தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்த ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் 40 நாடக பனுவல்கள் இயற்றி தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்த்தவர்.
ஆனால், அவருடைய நினைவைப் போற்றவோ, புகழைப் பறைசாற்றவோ குறிப்பிடத்தக்க நினைவுச் சின்னங்கள் என்று எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது வரலாற்றுப் பெருந்துயராம். இந்நிலையில் மதுரையில் அவரது பெயரிலிருந்த ஒரே கலையரங்கத்தின் பெயரையும் தமிழ்நாடு அரசு மாற்ற முயல்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது முழுக்க முழுக்க மண்ணின் மக்களாகிய போற்றுதலுக்குரிய தமிழர்களின் அடையாளங்களை அழித்து, அவர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களுக்கென்று எவ்வித அடையாளச் சின்னங்களும் உருவாகிவிடாமல் இருட்டடிப்பு செய்யும் ஆரிய – திராவிடக் கூட்டுச்சதியின் மற்றுமொரு திட்டமேயாகும்.
மதுரையில் ஏற்கெனவே ஒரு கலையரங்கம் உட்படப் பல்வேறு இடங்களுக்கு ராணி மங்கம்மாள் பெயர் சூட்டப்பட்டு நினைவுகூரப்படும் நிலையில் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்திற்கும் அவருடைய பெயரையே வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ஏற்கெனவே இருந்தவாறு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். ஒருவேளை அப்பெயரை வைக்கத் தவறினால் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்