Seeman: விஜயலட்சுமி விவகாரம்.. மனைவியுடன் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் - போலீஸ் தீவிர விசாரணை!
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது மனைவியுடன் ஆஜரானார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால், என்னுடைய அனுமதியின்றி, அதை சீமான் கலைத்துவிட்டார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோயம்பேடு துணை ஆணையர் உமையாளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12ம் தேதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சீமான் செப்டம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என்று அவரது தரப்பினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சீமான் மீது அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தெரிவித்தார். அப்போது பேசிய விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் போலீஸாரின் சம்மனை ஏற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக சீமான் இன்று மதியம் தனது மனைவி கயல்விழியுடன் ஆஜராகி இருக்கிறார். அவரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வளசரவாக்கம் பகுதியில் ஏராளமான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டாபிக்ஸ்