Schools Re Open: ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Schools Open: வரும் ஜூன் 6 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

Schools ReOpen: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ம் தேதி 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் என பள்ளிகல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவுபெற்றது. அதேபோல், நான்காம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை இறுதி தேர்வு நடந்து முடிந்தது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர்.
மக்களவை தேர்தல்
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுவை மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இறுதியாக 7வது கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதால், மாணவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தைக் குறைக்க, அதன் பின் பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.