RSS rally case: ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கு; உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கு வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில், உளவுத் துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள்ளது.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று பேரணியை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அனுமதி வழங்கவில்லை. அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மற்ற இடங்களில் ஏன் அனுமதி வழங்கவில்லை என காவல்துறை தரப்புக்கு கேள்வி எழுப்பினார். காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம். ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது எனத் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "கோவையை தவிர்த்த மற்ற இடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களது உயிரை துச்சமென நினைத்து, நேரத்தை தியாகம் செய்து தகவல்களை சேகரிக்கும் உளவுத் துறையினர் தரும் தகவல்களை எப்படி ஊகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பி, உளவுத் துறை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது எனவும், பேரணிக்குதான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா? வேண்டாமா? என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நவ.4) ஒத்திவைத்தார்.
டாபிக்ஸ்