Palani Rope Car: பழனியில் ரோப் கார் சேவை இயங்காது- மாற்று வழி என்ன?
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படுவது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். பக்தர்கள் சிரமமின்றி மலைக் கோயிலுக்குச் சென்று வர ரோப் கார் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. ஆனால், மலை மீது கோயில் அமைந்துள்ளதால் சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் படிகள் வழியே ஏறி செல்வது சிரமமானது ஆகும். மலைக் கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு தமிழக அரசு சார்பில் அங்கு ரோப் கார் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப் கார் உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ரோப் கார் சேவை இரவு பூஜை வரை செயல்படுகிறது.
இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்படும். அதன்படி, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று (ஜன.19) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரயிலை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்:
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் கோயில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதாவது ஒரு ஆவண எண்ணை சமர்ப்பித்து, அதோடு தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்க கோபுரம், தங்கத்தேர், தங்க கவசம், மயில்வாகனம் ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 18 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் 2000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்