Ramadoss: அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்.. தடுக்க தீர்வு என்ன? அரசு விளக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்
Ramadoss: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? ஏதேனும் சிறப்பு வழிகளைக் கண்டறிந்து ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறப்போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

Ramadoss : தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. 9 நாட்களில் 4 பேர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. இதற்கு தடுக்க தீர்வு என்ன? என்பதை அரசு விளக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மணிவாசகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த மணி வாசகன்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மணிவாசகன் சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் நண்பர்கள், சக பணியாளர்கள், உறவினர்கள் போன்றோரிடமும் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் சுமை ரூ.50 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், அதை எப்படி அடைப்பது? என்பது தெரியாமல் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தற்கொலை கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார். மணிவாசகனின் தற்கொலையால் அவரது இளம் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.