தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadoss: 'தமிழகத்தில் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுகிறது'- ராமதாஸ் வேதனை!

Ramadoss: 'தமிழகத்தில் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுகிறது'- ராமதாஸ் வேதனை!

Karthikeyan S HT Tamil
Jul 10, 2024 08:59 PM IST

Ramadoss Statement: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி, அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்தாடுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

Ramadoss: 'தமிழகத்தில் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுகிறது'- ராமதாஸ் வேதனை!
Ramadoss: 'தமிழகத்தில் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுகிறது'- ராமதாஸ் வேதனை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

'குடி'அரசு

எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது

இந்தியா என்ற 'குடி'அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று போராடியதன் பயனாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள், நம்மை மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறிவிட்டு வெளியேறினார்கள்.

விடுதலை மட்டும் போதாது, மக்களை மக்களே ஆளும் நிலை வரவேண்டும் என்ற நோக்குடன் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்தியாவை 'குடி'அரசு நாடாக நமது தலைவர்கள் அறிவித்தார்கள்.

குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது.

குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு.

குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு.

குடியரசு என்றால் சந்துபொந்துவிடாமல் எல்லா இடங்களிலும் மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்கச்சொல்லும் அரசு என்பது இப்போதுதான் புரிகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி, அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்தாடுகிறது.

கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாக கூறுகிறார் ஒரு மூத்த அமைச்சர்.

என்னவோ, மதுவுக்கு அடிமையான மக்கள் நிறைந்த தமிழ்நாட்டில் பணி செய்வது எமனுக்குதான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் அறிக்கை

முன்னதாக ராமதாஸ் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், "புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து குடித்த விக்கிரவாண்டி தொகுதி மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரபு ஆகிய இரு தொழிலாளர்கள் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு கிராமத்திற்குச் சென்று கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, சுரேஷ் பாபு, பிரகாஷ், காளிங்கராஜ் உள்ளிட்டோருடன் சேர்ந்து குடித்துள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில் 7 பேருக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 நாள் தீவிர மருத்துவத்திற்குப் பிறகு 5 பேர் வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதமுள்ள இருவர் கல்லீரல் பாதி்ப்புக்காக தொடர்ந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.

காவல்துறை தவறிவிட்டது

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதையும், கடத்தி வரப்படுவதையும் தடுக்க தமிழக காவல்துறை தவறிவிட்டது என்பதைபே இந்த நிகழ்வு காட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் புதுவையில் இருந்து வாங்கிவரப்பட்ட கள்ளச் சாராயத்தைக் குடித்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை விழித்துக் கொண்டு எல்லைப் பகுதியில் சோதனையை வலுப்படுத்தி இருந்தால், மதுராபூரிகுடிசை கள்ளச்சாராய பாதிப்புகளை தடுத்திருக்க முடியும். ஆனால், புதுவையில் இருந்து கொண்டுவரப்படும் கள்ளச் சாராயத்தைத் தடுக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நடவடிக்கை எடுக்கவேண்டும்

கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: