தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Caste Census: ‘தவிக்கும் தமிழ்நாட்டுக்கு விடியல் எப்போது?’ மருத்துவர் ராமதாஸ் சரமாரி கேள்வி!

Caste Census: ‘தவிக்கும் தமிழ்நாட்டுக்கு விடியல் எப்போது?’ மருத்துவர் ராமதாஸ் சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Nov 22, 2023 10:57 AM IST

”நீதிக்கட்சியின் தொடக்க நாள், வி.பி.சிங் சிலை திறப்பு என சமூகநீதியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை எல்லாம் கொண்டாடும் தமிழக அரசின் நினைவுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் வர மறுப்பது மிகவும் நல்வாய்ப்புக் கேடானது தான்”

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சமூகநீதியின் தலைநகரமாக என்னால் போற்றப்படும் பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, முடிக்கப்பட்டு, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதுடன், அதனடிப்படையில், மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 75% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்ட கர்நாடகமும், ஒதிஷாவும் அது குறித்த விவரங்களை அடுத்த மாதம் வெளியிடவுள்ளன. இந்த வரிசையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த 15-ஆம் நாள் சில மாவட்டங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திய ஆந்திர அரசு, நேற்று 21-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது. இரு கட்டங்களாக அடுத்த சில மாதங்களில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆந்திர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

28 மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் நான்காவது மாநிலமாக ஆந்திரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதும், தெலுங்கானா, இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவிருப்பதும் சமூகநீதிக்கு உவப்பளிக்கும் செய்திகள். இதேநிலை நீடித்தால், அடுத்த சில மாதங்களில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, சமூகநீதிக் கொடி உயரப் பறப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில்? சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தென்படவில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். ஆனால், மார்க்கமிருந்தும் மனம் இல்லாததால், தமிழ்நாடு அரசே, 2008-ஆம் ஆண்டின் புள்ளியியல் சட்டத்தை பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு பதிலாக, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டு காத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதி, நவம்பர் 21-ஆம் நாளான நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை; மாநில அரசின் சார்பிலும் நினைவூட்டல்கள் எதுவும் செய்யப் படவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விடக் கூடாது என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் விருப்பமோ? என்ற ஐயம் எழுகிறது.

தமிழ்நாடு என்ற தீபகற்பத்தின் மூன்று நில எல்லைகளாக திகழ்பவை ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தான். இவற்றில் கர்நாடகத்தில் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்டது; ஆந்திரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது; கேரளத்தில் சாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு, அங்கு 2.5% மக்கள்தொகை கொண்ட சாதிகளுக்கு கூட தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் 3 எல்லைகளிலும் சமூகநீதி ஒளி ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால், சமூகநீதியின் துரு பிடித்த தொட்டிலாக மாறி விட்ட தமிழ்நாடு தான் இருளில் சிக்கித் தவிக்கிறது. இந்த கசப்பான உண்மை கூட ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த காலங்களில் பா.ம.க. குரல் கொடுத்த போதெல்லாம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மது விற்கப்படுவதைக் காரணம் காட்டி, ‘‘எரியும் தீபகற்பத்துக்கு நடுவே கற்பூரமாய் தமிழ்நாடு இருக்கிறது. எப்படி மதுவிலக்கை கொண்டு வர முடியும். அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் போது, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்’’ என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தனர். தீமையை திணிக்க அண்டை மாநிலங்களை எடுத்துக்காட்டும் ஆட்சியாளர்கள், சமூகநீதியை நிலை நாட்ட அண்டை மாநிலங்களின் சாதனைகளை கண்டுகொள்ள மறுப்பது ஏன்? இதை விட அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு இருக்க முடியுமா? சமூகநீதி தளத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு இதைவிட பெரிய இரண்டகத்தை செய்ய முடியுமா?

பிகார், கர்நாடகம், ஒதிஷா ஆகிய மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாட்டிலும் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதற்கு எந்த தடையும் இல்லை; உச்சநீதிமன்றமே அதை அனுமதிக்கிறது; கணக்கெடுப்புக்கு அதிக செலவு ஆகாது என்று தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதற்காக கருத்தரங்கம் நடத்தி, அது குறித்த புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினேன். இவ்வளவு நடவடிக்கைகளுக்குப் பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வரவில்லை.

நீதிக்கட்சியின் தொடக்க நாள், வி.பி.சிங் சிலை திறப்பு என சமூகநீதியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை எல்லாம் கொண்டாடும் தமிழக அரசின் நினைவுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் வர மறுப்பது மிகவும் நல்வாய்ப்புக் கேடானது தான். சமூகநீதி தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதை உணர்ந்து தமிழகத்தில் மாநில அரசின் மூலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் உடனடியாக ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்