Kanniyakumar Express: திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி? லோகோ பைலட் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanniyakumar Express: திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி? லோகோ பைலட் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்

Kanniyakumar Express: திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி? லோகோ பைலட் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 03, 2023 07:29 AM IST

திருச்சி அருகே தண்டவாளத்தில் டயர்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. லோகோ பைலட் சாமத்தியத்தில் பெரும் விபத்து தடுக்கப்பட்ட நிலையில், சென்னை நோக்கி சென்ற ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (கோப்புப்படம்)
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (கோப்புப்படம்)

அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கருப்பு நிறத்தில் தடுப்பு போன்று பொருட்கள் இருந்ததை, ரயில் எஞ்ஜின் லோகோ பைலட் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் அதற்குள் அந்த கருப்பு பொருளின் அருகே ரயில் சென்ற நிலையில், தண்டவாளத்தில் லாரி டயர் போடப்பட்டு, அதன் மீது மற்றொரு டயரை நிற்க வைத்து இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே டிரைவர் பிரேக் பிடித்தாலும், ரயில் எஞ்ஜின் அவற்றின் மீது மோதிவிட்டு சிறிது தூரத்தில் சென்று நின்றுள்ளது. ரயில் மோதிய வேகத்தில் அந்த டயர்களில் ஒன்று எஞ்ஜினில் சிக்கியது. அத்துடன், எஞ்ஜினையும், மற்ற பெட்டிகளையும் இணைக்கும் கப்லிங் பகுதியில், பெட்டிகளுக்கு செல்லும் கருப்பு நிற வேக்கம் டியூப் கிளிப் மற்றும் பீடு டியூப் கிளிப் கழன்று விழுந்தது.

இதனால் எஞ்சினும், பயணிகள் இருந்த பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், பெட்டிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், திடீரென ரயில் நடுவழியில் நின்றதாலும், தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் கண் விழித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரயில் லோகோ பைலட்டும், உதவியாளரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது, லாரி டயரில் ஒன்று மட்டும் எஞ்ஜினுக்கு அடியில் சிக்கி இருந்தது. இதுபற்றி வாளாடி ரயில் நிலைய அதிகாரிக்கும், ரயில் மேலாளருக்கும் லோகோ பைலட் தகவல் கொடுத்தார்.

பின் எஞ்ஜினில் சிக்கி இருந்த டயரை எஞ்ஜின் டிரைவரும், உதவியாளரும் அப்புறப்படுத்தி அருகில் உள்ள முட்புதரில் வீசினர். பின்னர், வேக்கம் டியூப் கிளிப் மற்றும் பீடு டியூப் கிளிப்களை சுமார் அரை மணிநேரம் போராடி பொருத்தினர்.

பின்னர் அந்த ரெயில் 1.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே இருப்பு பாதை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், விருத்தாசலம் ஆய்வாளர் ரத்தினகுமார் மற்றும் போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை உதவி பாதுகாப்பு கமிஷனர் சின்னத்துரை தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

முதல்கட்ட விசாரணையில் அந்த இடத்தை நள்ளிரவு 12.37 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும், நள்ளிரவு 1.05 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது டயர் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட டயர் எஞ்ஜினில் சிக்கி சுமார் 600 மீட்டர் தூரம் இழுத்துச்சென்றதும், அப்போதுதான் வேக்கம் டியூப் கிளிப், பீடு டியூப் கிளிப்கள் கழன்று ரெயில் நின்றிருக்கிறது.

இடைப்பட்ட நேரத்தில் தான் அடையாளம் தெரியாத நபர்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து நாசவேலையில் ஈடுபட்டருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை முன்னதாகவே கவனித்த லோகோ பைலட், சரியான நேரத்தில் பிரேக் பிடித்து, சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர். அத்துடன் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம் போலீசார், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் ரயில்வே இளநிலை பொறியாளர் முத்துக்குமரன், விருத்தாசலம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டயர்களை தண்டவாளத்தில் வைத்து ரயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, சற்று தாமதமாக புறப்பட்டு சென்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.