rss route march: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 6 இடங்களில் அனுமதி இல்லை - உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களை தவிர மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: காவல் துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பான வழக்கில் 44 இடங்களில் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை, நாங்குநேரி ஆகிய 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திக் கொள்ளலாம். 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு மற்றொரு தேதியில் பேரணி நடத்தலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று பேரணியை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராத 44 இடங்களில் உளவுத்துறை அறிக்கைக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.