Orange Alert: மக்களே உஷார்..இந்த 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் பெய்த கனமழை தற்போது வரை நீடிக்கும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கனமழையால் கிண்டி, வேளச்சேரி, வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தரமணியில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ, பூந்தமல்லியில் 7.4 செ.மீ நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. தென் சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட 3 மடங்கு அளவில் மழை பெய்துள்ளது. சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மதியம் 1 மணிவரை மிதமான மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்