இரண்டாவது சீசனுக்கு ஊட்டி தயார்: 4 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி தொடக்கம்
ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் அங்குள்ள தாவிரவியல் பூங்காவில் 4 லட்சம் மலர் நாற்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது.
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக நான்கு லட்சம் மலர் நாற்றுகள் தயார் செய்யப்பட்டு நடவுப்பணி நேற்று துவங்கியது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் செப். மாதம் துவங்குகிறது. இதற்கான மலர் செடிகள் நடவு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வித விதமான விதைகள் வரவழைக்கப்பட்டன.
கோல்கட்டா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து 'இன்காமேரி கோல்டு பிரெஞ்ச் மேரிகோல்டு ஆஸ்டர் வெர்பினா லுாபின்' உட்பட 60 வகை விதைகள் பெறப்பட்டு நாற்று உற்பத்தி செய்யும் பணி சில மாதங்களாக நடந்தது.
தற்போது நான்கு லட்சம் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. நடவுப் பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தாவரவியல் பூங்காவில் நேற்று துவக்கி வைத்தார். மேலும் 10 ஆயிரம் மலர் தொட்டிகளிலும் நாற்று நடும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கலெக்டர் அம்ரித் கூறுகையில் ''அரசு தாவரவியல் பூங்காவில் நான்கு லட்சம் மலர்கள் மாடங்களில் காட்சிப்படுத்த 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் தயார் செய்யப்படும்'' என்றார்.தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கேரளா கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணியர் அதிகளவில் வருவது வழக்கம். அங்கு கன மழை பெய்கிறது. மேலும் நீலகிரிக்கு 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு பலத்த மழை பெய்வதால் தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா மையங்களும் வெறிச்சோடி உள்ளன.