Bitcoin Fraud: பிட்காயின் முதலீடு.. பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ.12 லட்சம் மோசடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bitcoin Fraud: பிட்காயின் முதலீடு.. பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ.12 லட்சம் மோசடி!

Bitcoin Fraud: பிட்காயின் முதலீடு.. பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ.12 லட்சம் மோசடி!

Karthikeyan S HT Tamil
Feb 04, 2023 10:29 PM IST

பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை தூத்துக்குடி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பிட்காயின் - கோப்புபடம்
பிட்காயின் - கோப்புபடம்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை அடுத்த வௌவால்தொத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48). இவருடைய பேஸ்புக் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள WhatsApp எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையதளத்தில் 12 லட்சத்து 10 ஆயிரத்தி 740 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமர் சைபர் கிரைம் இணையதளத்தில் (National Cyber crime Reporting Portal) புகாரை பதிவு செய்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ராமரை மோசடி செய்தது கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் நேற்று கோயம்புத்தூர் சென்று கருணாகரன் வீட்டு முன்பு வைத்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிமிருந்து ரூ.5 லட்சம் பணம், ஒரு ஸ்கோடா கார், ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கருணாகரனை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்து 98 ஆயிரத்து 865 ரூபாய் பணத்தையும் முடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.