Ganja Cake: முதன்முறையாக சென்னையில் கஞ்சா கேக்..நூதன முறையில் கடத்தி வந்தவர் கைது!
Ganja Cake In Chennai: சென்னையில் முதல் முறையாக கஞ்சா கேக் விற்பனைக்கு வந்துள்ளது சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தலைநகர் சென்னையில் போதை சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருவது வேதனை அளிக்கிறது. கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லேட் வரிசையில் தற்போது கஞ்சா கேக் முதன்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.
கஞ்சா சாக்லேட்டுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சென்னையில் நல்ல வரவேற்பு இருந்ததால் புது ரகமாக கஞ்சா கேக்கையும் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். இதை கடத்தி வரும் கும்பலை கஞ்சா சாரல் என்றும் அழைக்கிறார்கள்.
கஞ்சா கேக்கை கூரியர் மூலம் சென்னைக்கு கடத்திவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு கடையில் சனிக்கிழமை இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த கூரியர் பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் கேக் வடிவில் 200 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், கஞ்சாவை கூரியர் பார்சலில் கடத்தி வந்தது கொடுங்கையூரை சேர்ந்த ஏக்நாத் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், சென்னைக்கு தற்போது தான் முதன்முதலாக கஞ்சா கேக் விற்பனைக்கு வந்துள்ளது என்றும், வடமாநிலங்களில் இதை சர்வ சாதாராணமாக விற்பனை செய்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
தலைநகர் சென்னையில் போதை சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருவதும், அது சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில் தற்போது கஞ்சா கேக் விற்பனைக்கு வந்துள்ளது வேதனை அளிக்கிறது.
மீண்டும் கஞ்சா விற்பனை தலை தூக்கவிடாமல் தடுக்க 'கஞ்சா வேட்டை 4.0' என்ற அதிரடி நடவடிக்கையை போலீசார் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள், அவற்றை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க பண வெகுமதியும் வழங்கப்படும் எனவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9