தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vaikasi Visakam : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அசைவம் சமைக்க தடை.. வைகாசி விசாகத் திருநாளில் என்ன விஷேசம்..!

Vaikasi Visakam : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அசைவம் சமைக்க தடை.. வைகாசி விசாகத் திருநாளில் என்ன விஷேசம்..!

Pandeeswari Gurusamy HT Tamil
May 22, 2024 09:10 AM IST

Vaikasi Visakam : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அசைவ உணவுகளை சமைக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அசைவம் சமைக்க தடை.. வைகாசி விசாகத் திருநாளில் என்ன விஷேசம்..!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அசைவம் சமைக்க தடை.. வைகாசி விசாகத் திருநாளில் என்ன விஷேசம்..!

Vaikasi Visakam : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அசைவ உணவுகளை சமைக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாக நாளான இன்று முருகன் கோவிலை பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலத்தில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள்  திருச்செந்தூர் வந்து கடலில் புனித நீராடி வைகாசி விசாகத் திருவிழா நாளான இன்று முருகனை தரிசித்து வருகின்றனர். இன்று அதிகாலை ஒரு மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணி அளவில் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடத்தப்படும்.

பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் இரவு 7:15 மணி அளவில் ராக்கால அபிஷேகம் நடைபெற உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று வைகாசி விசாக திருநாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அசைவம் சமைக்க தடை

இதனிடையே வைகாசி விசாகத்தை ஒட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் விரதத்தின் நிறைவாக மீன் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். ஆனால் கோயில் வளாகத்தில் மீன் சமைப்பது அசைவம் சாப்பிடுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதனால் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மீன் சமைப்பதற்கும், சாப்பிட்டு விரதற்கும் தடை விதிக்கப்படுகிறது என கோயில் ஆணையர் கார்த்திக் அதிரடியாக அறிவித்துள்ளார். இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வைகாசி விசாக திருநாள் தோற்றம் 

அசுரர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் தங்களது சிக்கலை முறையிட்டனர். அசுரர்களிடமிருந்து அவர்களைக் காக்க நினைத்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.

அந்த தீப்பொறிகள் தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை நதியானது அதனைச் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சிவபெருமானிடம் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தன.

அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தது. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் வளர்த்தனர். பின்னர் பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை திருநாளில் ஒன்றாக இணைத்தார். ஆறுமுகங்களைக் கொண்ட இவர் ஆறுமுகம் என்று அழைக்கப்பட்டார்.

முருகப்பெருமானின் ஆறு திருமுகங்களும் முற்றறிவு, வரம்பில்லாத ஆற்றல், அளவற்ற இன்பம், பேரருள் உடமை, தன் வயமுடமை, இயற்கை அறிவு என ஆறு குணங்களைக் கொண்டதாகும்.

இவருடைய ஆறு திருமுகங்களும் புகழ், வைராக்கியம், வீரியம், அழகு, ஐஸ்வர்யம், ஞானம் என்ற ஆறு குணங்களையும் குறிக்கின்றன. முருகப்பெருமான் அவதரித்த தினம் என்பதால் விசாகம் விசேஷ தினமாக் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு பெயர்களைக் கொண்ட முருகப் பெருமான் ஐம்பூதமும் உயிருமாகிய ஆறினையும் திருமுகங்களாகக் கொண்டவர். உலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் முருகப்பெருமான் குழந்தையாக பிறந்தது இந்த வைகாசி விசாகத் திருநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9