Chennai Airport: விமானங்கள் புறப்பாடு தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள்
சென்னை விமான நிலையத்தில் விமானம் புறப்பாடில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கும் விதமாக புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து விமான சேவை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க A-CDM என்ற விமான நிலைய ஒருங்கிணைந்த முடிவு எடுக்கும் விதமாக புதிய மென்பொருள் சென்னை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உருவாக்கியுள்ளது.
இந்த மென்பொருள் செயல்பாடானது ஏற்கனவே மும்பை விமான நிலையத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தற்போது சென்னைக்கு இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Airport Collaborative Decision Making என்பதன் சுருக்கம்தான் இந்த A-CDM மென்பொருள். இதை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலைய கட்டுப்பாடு அறை அலுவலர்கள், விமான பாதுகாப்பு துறை, விமான நிறுவனங்களின் அலுவலர்கள், கிரவுண்ட் பணியாளர்கள், வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் முடிவை எடுக்கலாம். இதனால் விமானம் புறப்பாடில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்.
இந்த புதிய மென்பொருளில் உதவியுடன் விமானம் நிறுத்தப்படுவதில் இருந்து, விமானம் எப்போது வெளியே கொண்டு வரப்பட வேண்டும், விமானம் ஓடுதளம் செல்ல எவ்வளவு நேரம் ஆகும், விமானம் காத்திருக்காமல் நேரடியாக ஓடுபாதைக்கு செல்ல ஓட தொடங்குவதற்கான முடிவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்ய முடியும்.
இதன்மூலம் சென்னை விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் தாமதம் வெகுவாக குறைக்கப்படுவதோடு, எரிபொருளும் பெரிய அளவில் சேமிக்கப்படும். இதனால் பயணிகளுக்கான சேவை குறைபாடு தடுக்கப்படும்.
தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 35 விமான சேவைகள் உள்ளன. இந்த புதிய மென்பொருள் வருகையால் கூடுதலாக 10 சேவைகள் அதிகரிக்கும்.