Music director dhina: இசையமைப்பாளர் தீனாவுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு !
சென்னை: தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்த தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு இசை அமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதன் துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களை நியமனம் செய்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ விவகாரத்தில் நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருந்தது.
இதையடுத்து, காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறி பாஜகவில் இருந்து 6 மாத காலத்துக்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.
கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு கலங்கம் விளைவித்ததாக கூறி அறிக்கை வெளியாகி இருக்கிறது. தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நேரடியாக பதிலடி கொடுத்தேன்.
நான் கட்சிக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படவில்லை. பாஜக தேசிய தலைமைக்கு இங்கு நடப்பது தெரியும் என நினைக்கிறேன். பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது, தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன்." என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான், நடிகை காயத்ரி ரகுராம் வகித்த அந்த பொறுப்புக்கு இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாபிக்ஸ்