CM MK Stalin: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம்!
திருச்சியில் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரின் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு, மாநிலம் முழுக்க திமுக மாவட்டங்களை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதிலுள்ள ஒவ்வொரு மண்டல வாரியாக, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற 26-07-2023 (புதன்கிழமை) அன்று திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.