'தமிழகத்தின் கனவு நனவாகிய தருணம் இது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
Khelo India game 2024: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் தமிழகத்தின் கனவு நனவாகியிருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விழா தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரவேற்பு ஆற்றிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ துவக்கி வைக்க வருகை தந்திருக்கும் பிரதமர் மோடியை வரவேற்கின்றேன்.
தமிழ்நாடு அரசு பல சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழக அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். 2021 ஆண்டில் இருந்து மாநில, இந்திய மற்றும் உலக அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்-களை வழங்க உள்ளோம்.
எப்படி நம்முடைய தமிழக முதல்வரின் திராவிட மாடல் அரசில் அனைத்து துறைகளிலும், இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகின்ற வகையில் செயல்பட்டு வருகிறதோ, அதேபோல, நம்முடைய விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.
பொதுவாக விளையாட்டுப் போட்டிகள் என்றால், வீரர்கள் வீராங்கனைகள்தான் பங்கேற்பார்கள். ஆனால், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் மூலம் பல்வேறு தரப்பினரையும் விளையாட்டு வீரர்களாக உருவாக்கியிருக்கிறோம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 76 பயிற்சியாளர்களை நியமித்துள்ளோம். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஏராளமான பரிசுத் தொகைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் தமிழகத்தின் கனவு நனவாகியிருக்கிறது. இந்நிகழ்வை நடத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருந்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்