Chennai: ‘என் அப்பா தான் காரணம்.. அமைச்சர் மகளுக்கே இந்த நிலைமை’ -கண்ணீருடன் சேகர்பாபு மகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai: ‘என் அப்பா தான் காரணம்.. அமைச்சர் மகளுக்கே இந்த நிலைமை’ -கண்ணீருடன் சேகர்பாபு மகள்

Chennai: ‘என் அப்பா தான் காரணம்.. அமைச்சர் மகளுக்கே இந்த நிலைமை’ -கண்ணீருடன் சேகர்பாபு மகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2023 01:01 PM IST

என் அப்பாவால் எனது உயிருக்கு ஆபத்து என அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு மகள்
அமைச்சர் சேகர்பாபு மகள்

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணியும், சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபு இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ஜெயகல்யாணி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அமைச்சர் சேகர்பாபு மருமகனின் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததாகவும், அதன் பேரில் தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயக கல்யாணி நீதிமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 23 வயது பெண் எனது கணவர் மீது வழக்கு ஒன்று கொடுத்திருந்தார். அதைத் தவிரச் சிறு சிறு வழக்குகள் அவர் மீது உள்ளன. எனது தந்தை சேகர்பாபுவின் பேச்சைக் கேட்டு காவலர்கள் சிலர் எனது கணவர் மீது பொய் வழக்குப் போட்டு குற்றவாளி ஆக்குகின்றனர். எங்கு எது நடந்தாலும் எனது கணவரின் பெயர் அதில் முதல் குற்றவாளியாகச் சேர்த்து விடுகின்றனர்.

நான் கர்ப்பமாக இருந்த போது கூட எனது தந்தை என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை. ஊர் ஊராக என்னை அலைய வைத்தார். சிசேரியன் மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. பூந்தமல்லி மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்து வந்த போது எனது கணவரை மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

அமைச்சர் சேகர்பாபு மகள்
அமைச்சர் சேகர்பாபு மகள்

கைது செய்யப்பட்ட பிறகு 4 மணி நேரமாகியும் அவரை பார்க்க என்னை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. எனது கணவர் மீது பொய் வழக்குப் போடும் காவல் ஆய்வாளர்களுக்கு எனது அப்பா சேகர்பாபு தான் இங்கு எல்லாமே. அவர் சொல்வதைத்தான் அவர்கள் அனைவரும் செய்கிறார்கள்.

நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட முதலமைச்சர் தொகுதியைச் சேர்ந்த கட்சிக்காரர்கள் மற்றும் எனது அப்பாவின் ஆட்கள் பொது வெளியிலேயே என்னை மிரட்டுகிறார்கள். அசிங்கமாகப் பேசுகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதற்கு ஓட்டுப் போட்டோம். திமுக வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற எண்ணத்தில் தான் ஓட்டுப் போட்டோம். ஒரு திமுக அமைச்சரின் மகளான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும்?.

எனது கணவர் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள் என டிஜிபி, நீதிபதிகள், ஆணையர் உள்பட அனைவரிடத்திலும் மனு கொடுத்து விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது கணவரின் தோழி ஒருவரை எனது அப்பாவின் ஆட்களின் மிரட்டி அவர் மீது பொய் கொடுக்க வைத்துள்ளனர். அதேபோல் புகார் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பேரம் பேசி உள்ளனர்.

இவற்றை அனைத்தையும் காவல் நிலையத்தில் வைத்துச் செய்துள்ளார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அந்தப் பெண்ணை காவல் ஆய்வாளர் எப்படிப் பேச வைத்தார் என்பதை என் அப்பாவிற்கு அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்களும் என்னிடம் இருக்கிறது. அந்தப் பெண் எனது கணவருக்கு போன் செய்து காவல்துறையினர் மிரட்டி வாக்குமூலம் வாங்கினார்கள் என்று கூறிய ஆடியோவும் என்னிடம் இருக்கிறது.

அமைச்சர் சேகர்பாபு மகள்
அமைச்சர் சேகர்பாபு மகள்

எனது கணவரைப் பார்க்க விடாமல் தடுக்கிறார்கள். அவரின் உடைகள் கிழிந்துள்ளதாகச் சிலர் எனக்குத் தகவல்கள் கொடுத்தனர். சிறைச்சாலையில் உயிரிழப்புகள் ஏற்படுவது தற்போது அதிகரித்துவிட்டன. அதேபோல் எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

நான் முதலமைச்சர் வீட்டிற்குச் செல்ல உள்ளேன். அவரிடம் என்னிடம் இருக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உள்ளேன். அதனைப் பார்த்துவிட்டு எங்கள் பக்கம் உண்மை இருந்தால் அதற்குண்டான நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும்.

என் அப்பா சேகர்பாபுவை என்ன செய்ய வேண்டும் என முதலமைச்சருக்குத் தெரியும். ஒருவேளை எனது அப்பா மீது நியாயம் இருந்தால் முதலமைச்சர் என்னைக் கைது செய்ய உத்தரவிட்டாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.