பரவும் கொரோனா! கட்டாயமாகிறதா முககவசம்? மா.சு பேரவையில் சொன்ன பதில்!
இரண்டாவது அலையில் இருந்த வீரியம் மூன்றாவது அலையில் இல்லை. மூன்றாவது அலைக்கு பிறகு யாரும் முகக்கவசங்களை பெரியதாக அணிவது இல்லை. ஆனால் அணிந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது அவசியம்
இந்தியா முழுவது கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிற ஒமிக்ரானின் ஒருமாற்றமான புதிய வைரஸ் XBB-1.16 மற்றும் BA-2 என்ற இரண்டு வைரஸ்களும் புதியதாக பரவத்தொடங்கி உள்ளது.
கடந்த ஒன்றரை மாதம் முன்னாள் வரை ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஐம்பதிற்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் மொத்த பரவல் இருந்தது தமிழ்நாட்டில் குறைந்தபட்ச பரவலாக ஒன்றரை மாதம் முன் 2 என்ற அளவில் இருந்த நிலையில் நேற்று அது 386 என்ற அளவில் உயர்ந்திருப்பது உண்மை.
கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 5878 பேருக்கு இந்த பாதிப்பு உருவாகி உள்ளது. கேரளாவில் 2773 பேருக்கும் டெல்லியில் 484 பேருக்கும், ஹிமாச்சல பிரதேசத்தில் 422 பேருக்கும் கொரோனா பரவல் பரவி இருக்கிறது.
கொரோனா பரவல் தொடங்கிய உடனே முதலமைச்சர் எங்களிடம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். கடந்த 7ஆம் தேதி ஒன்றிய சுகாதார அமைச்சர் காணொலி மூலம் நடத்திய கூட்டத்தில் வெளிப்படையாக தமிழ்நாடு எடுத்த நடவடிக்கைகளை செயல்பாடுகளை மிக வெகுவாக பாராட்டி மகிழ்ந்தார்.
முதலமைச்சர் அவர்கள் கொரோனா பாதிப்பு வந்த உடனேயே மார்ச் 21ஆம் தேதி ஆய்வுக்கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டார்கள். ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் வரும் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 11,333 மருத்துவக் கட்டமைப்புகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
இரண்டாவது அலையில் இருந்த வீரியம் மூன்றாவது அலையில் இல்லை. மூன்றாவது அலைக்கு பிறகு யாரும் முகக்கவசங்களை பெரியதாக அணிவது இல்லை. ஆனால் அணிந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது அவசியம்; கட்டாயம் என்று வரும் போது மருத்துவமனைகளில் இந்த பரவல் அதிகரித்து வருகிறது இதனால் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த சொன்னார்கள்.
7ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் சொன்னது ‘10 மற்றூம் 11ஆம் தேதிகளில் மாதிரி பயிற்சி ஒன்றை இந்தியா முழுவதும் நடத்த அறிவுறுத்தினார். அதன்படி ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட மருத்துவமனைகளில் மாதிரி பயிற்சியை செய்து வருகிறார்கள். இந்த மாதிரி பயிற்சியில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ், மருந்து வசதி குறித்து ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இது நான்காவது அலையா என்று கேட்டால்; இது மேலும் அதிகரித்தால் அலை என்று சொல்லலாம்; ஆனால் இது குறைவாகத்தான் ஏறிக்கொண்டு இருக்கிறது. எனவே இதனை அலை என்று எடுத்துக் கொள்ள முடியாது.
எண்ணிக்கை பெருகும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் முக கவசங்கள் அணிவதை கட்டாய நிலையை கொண்டு வரலாம் என்று அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.