பள்ளி மாணவன் கொலை விவகாரம்.. உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை -அன்பில் மகேஷ்!
பள்ளி மாணவன் கொலை விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மௌலீஸ்வரன் என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மௌலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி அவரை தாக்கியுள்ளனர்.
இதில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மௌலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாணவன் கொலை வழக்கில் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் முன்னதாக அவனுடன் படித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ’’திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தமும் வேதனையும் அடைந்தேன்
மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு முதல்வர் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இந்நிகழ்வின் போது பணியில் கவனக்குறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்