Mettur Dam : 90 ஆண்டுகள் பெருமை - 19வது முறையாக குறிப்பட்ட நாளில் திறக்கப்படும் மேட்டூர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி
Mettur Dam : காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள டெல்டா பகுதிகளில் காவிரி நீரைக்கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ஆண்டுதோறும் ஜீன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை 220 நாட்களுக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். இதற்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதனால், குறைந்தபட்சம் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருப்பு இருந்தால் மட்டுமே ஜீன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டு வந்தது.
அணை நீர்மட்டத்தோடு, பருவமழையும் கை கொடுத்தால் மட்டுமே, குறுவை சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் திறக்க முடியும். நீர் மட்டம் குறைவாக இருந்த ஆண்டுகளில் மேட்டூர் அணை திறக்கப்படுவது ஒத்திவைக்கப்படும். அணை கட்டப்பட்ட 89 ஆண்டுகளில் இதுவரை 18 முறை ஜீன் 12ம் தேதியிலும், 13 முறை அதற்கு முன்னதாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், பருவமழை முன் கூட்டியே தொடங்கியதாலும், கர்நாடக அணைகள் நிரம்பியதாலும், முன் கூட்டியே மே 24ம் தேதி அணை திறக்கப்பட்டது. சராசரியாக டெல்டா மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முன்கூட்டியே திறந்ததாலும், பருவமழை கை கொடுத்ததாலும் கடைமடை வரை நீர் பாய்ந்து, 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது.
நடப்பாண்டிலும் இதேபோல், அதிக சாகுபடிக்கு திட்டமிட்டு 80 கோடி ரூபாயில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஜீன் முதல் வாரத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இரு நாட்களுக்கு முன் பருவ மழை துவங்கியுள்ளது. ஆனாலும் கர்நாடக அணைகளில் நீர் வரத்தும், நீர் மட்டமும் குறைவாகவே உள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் 124.80 அடி உயரத்தில், 82.30 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. 3,702 கன அடி நீர்வரத்தும், 352 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.
மொத்தம் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 103.48 அடி நீர்மட்டம் இருப்பதால், குறிப்பிட்டபடி நாளை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுகிறார்.
இதன்மூலம் 4 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக விவசாயிகளும், வேளாண் துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி, முக்கொம்பு, கல்லணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகளும் கடந்த வாரத்தில் துவங்கியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்