காவிக்குள் ஒரு கம்யூனிஸ்டாக திகழ்ந்த குன்றக்குடி அடிகளார் நினைவு நாள்!
Kundrakudi Adigalar Memorial Day: காவிக்குள் தெய்வீகத்தையும் கருத்தில் பகுத்தறிவும் கொண்ட அற்புதத் துறவியாகத் திகழ்ந்த குன்றக்குடி அடிகளார் நினைவு நாள் இன்று ஏப்ரல் 15). இந்நாளில் அவரை நினைவு கூறுவது நமது கடமை.
‘குன்றக்குடி அடிகள்’ என்று அழைக்கப்பட்ட குன்றக்குடி பெரிய அடிகளார் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மா தம்பதிக்கு ஜூலை 11, 1925-ல் மகனாக பிறந்தார். அடிகளாருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அரங்கநாதன்.
பள்ளிப் பருவத்திலேயே தமிழ்ப் பேராசிரியர் சேதுப்பிள்ளையிடம் தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது இவரின் வழக்கமாக இருந்தது. பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த பிறகு தருமபுரி ஆதினத்தில் 1944ஆம் ஆண்டு கணக்கர் வேலையில் சேர்ந்தார். இதன் பிறகு அங்கேயே முறைப்படி தமிழ் கற்றார். அத்திருமடத்தின் 25-வது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்தினார்.
தருமபுர ஆதீனத்தில் தம்பிரானாக சந்நியாசம் வாங்கிய போது ஆதீன மடம் இவருக்குச் சூட்டிய பெயர் கந்தசாமி தம்பிரான் பரமாச்சாரியார். அதைத் தொடர்ந்து குன்றக்குடி மகா சந்நிதானமாகப் பட்டம் சூட்டிய பொழுது தெய்வசிகாமணி அருணாசலத் தேசிகப் பரமாச்சாரியார் ஆனார். பெரியாரின் கடவுள் மறுப்பு பிரசாரத்துக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தார் குன்றக்குடி அடிகளார். மதத் தலைவர்கள் பலரையும் ஒன்றிணைத்து 'தெய்வீக தமிழ் பேரவை' என்ற பெயரில் கடவுள் மறுப்பு பிரசாரத்துக்கு எதிராக இயங்கி வந்தார்.
பெரியார் எங்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தாரோ அங்கெல்லாம் சென்று அவரின் கருத்துக்களுக்கு எதிரானவற்றை அடிகளார் கூறி வந்தார். இப்படி பெரியாருக்கும் குன்றக்குடி அடிகளாருக்கும் ஆரம்பத்தில் கருத்து ரீதியான மோதல் போக்கு இருந்தது. இந்த சூழலில் ஒரு முறை பெரியாரை சந்திக்கும் வாய்ப்பு அடிகளாருக்கு ஏற்படுகிறது. ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அடிகளார் காத்திருக்க அவரை சந்திக்க படியேறி வந்தார் பெரியார். தன்னைவிட சுமார் 50 வயது மூத்தவரான பெரியார் தன்னிடம் பேசிய விதம் அவரை மிகவும் கவர்ந்தது.
பின்னர் பெரியாரின் கருத்துக்களை பொறுமையாக கேட்ட அடிகளார் பெரியாரின் மிகப்பெரிய பற்றாளராக மாறினார். தொடர்ந்து இருவரும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்கத் தொடங்கினார். இறுதிவரை இருவரும் நண்பர்களாக இருந்தனர். அதுமட்டுமல்லாமல் கம்யூனிச கருத்துக்கள் மீதும் பற்று்கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் உடனும் நட்பு பாராட்டி வந்தார். 'செம்மலர்' என்னும் பெயரில் கம்யூனிச இதழ் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆயுள் சந்தாதாரர் குன்றக்குடி அடிகளாரே.
குன்றக்குடி பெரிய அடிகளாருக்குள் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் வேரூன்றக் காரணமாக இருந்தவர் விபுலானந்த அடிகள். பிற மடாதிபதிகளைப் போல மக்களைவிட்டு ஒதுங்கி மடத்துக்குள் முடங்கி இருக்காமல் மக்களோடு மக்களாய் இருந்து, காவிக்குள் தெய்வீகத்தையும் கருத்தில் பகுத்தறிவும் கொண்ட அற்புதத் துறவியாகத் திகழ்ந்தவர் குன்றக்குடி அடிகளார்.
சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சு, எழுத்து, கலை எனப் பல துறைகளிலும் தனித்திறன் கொண்ட ஆளுமையாகத் திகழ்ந்தவர். குன்றக்குடியில் இவர் செய்த சமூக சேவையால் மக்களால் 'குன்றக்குடி அடிகளார்' என்று அன்போடு அழைக்கப்பட்டார். மடாதிபதியாக இருந்தபோதும், கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட பெரியாருக்கும் அண்ணாவுக்கும் தோழராய் இருந்தவர். பிற்காலத்தில் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்டவர்களாலும் ஒரேமாதிரியாக மதிக்கப்பட்டவர். தெய்வப்பணி என்பது மக்களின் சேவைப் பணியே என்பது அடிகளாரின் கொள்கை.
துறவுக் கோலத்தில் சமுதாயப் பணியில் சமூக நீதி காத்த சிற்பியாக விளங்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரியார். அவரது நினைவு நாளான இன்று (ஏப்ரல் 15) அவரை நினைவு கூறுவது நமது கடமை.