Illicit liquor: கள்ளச்சாராய மரணம்.. மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
Maduranthakam DSP: மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 13 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு பெண் உள்பட 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மரக்காணம், செல்லன் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்