Madurai Kamaraj University: மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் கைது!
மாணவ மாணவிகளிடம் தவறாக பேசியது சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பேராசிரியரை கைது செய்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முக ராஜா வன்கொடுமை சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக ராஜா. இவர் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது துறையில் பயிலும் மாணவ மாணவிகளிடம் அடிக்கடி ஒருமையில் பேசுவதும்., ஜாதியை கூறி இழிவு படுத்தி பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பேராசிரியர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக புகார்கள் எழுந்தது.
இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு பயிலும் மாணவிகளிடம் ஜாதி ரீதியாக ஒருமையில் பேசி உள்ளார். மேலும், தரக்குறைவாக பேசிவருவதாகவும் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிப்ரவரி 23ஆம் தேதி நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் சண்முகராஜா மீது கொடுத்த புகார் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் தவறாக பேசியது சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பேராசிரியரைக் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் மதுரை காமராஜர் பல்கலை கழக விடுதியில் தங்கி இருந்த மாணவி நேற்று மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் மாணவி தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புகழ் பெற்ற காமராஜர் பல்கலைக்கழகத்தில் அடுத்த பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்