RSS Rally: ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..கோர்ட் அதிரடி உத்தரவு!
அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் வழக்கு தொடர்ந்திருந்தது.

தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் 33 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சீருடை அணிந்தவர்களை மட்டுமே அணிவகுப்பு ஊர்வலத்தில் அனுமதிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அக்டோபர் 22 மற்றும் அக்டோபர் 29 ஆகிய இரண்டு நாட்கள் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த மனு அளித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்த காவல்துறை அனுமதி வழங்காமல் தாமதித்த நிலையில், அந்த தேதி கடந்துவிட்டது. இதையடுத்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது எனக் கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராகி 4 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.