தூத்துக்குடி துப்பாக்கி சூடு .. அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன?- உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தூத்துக்குடி துப்பாக்கி சூடு .. அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன?- உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு .. அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன?- உயர்நீதிமன்றம் கேள்வி

Karthikeyan S HT Tamil
Dec 12, 2023 09:14 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்பு படம்)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்பு படம்)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடி சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா ஆகியோர் அடங்கி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் ஹென்றி டிபேன், "ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். முறையாக விசாரணை நடத்தாத நிலையில் இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க அனுமதிக்க கூடாது. தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நீதிபதிகள், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டு மற்ற காவல் துறையினருக்கு எப்படி நற்சான்று வழங்கப்பட்டது என சிபிஐ தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சிபிஐ தரப்பு, குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதால், வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும், சிபிஐ விசாரணையில் எந்த தவறும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணையில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால் அந்த அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? அல்லது நடவடிக்கைகள் கைவிடப்பட்டதா? என விளக்கம் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையின் நகலை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.