Kodanad Case: 700 செல்போன் உரையாடல்கள், 6 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை
கொடநாடு வழக்கு தொடர்பாக 700 செல்போன் உரையாடல்கள், மலையாளத்திலிருந்து தமிழ் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 6 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஒர் ஆண்டுக்கு மேலாக 320 பேரிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், 1,500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்த அறிக்கையின் நகல் சிபிசிஐடி போலீசார வசமும் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 700க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது நீலிகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து கொடுத்தது தொடர்பாக மணிகண்டன் என்பவரிடமும், சாட்சிகளின் அடிப்படையில் கர்சன் செல்வம், ஜெயசீலன் ஆகியோரிடம் கோவை காவலர் பள்ளியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதைத்தொடந்து மேற்கூறிய மூவரும் ஆஜரான நிலையில், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்களை தொடர்ந்து தலைமை காவலர் ஜேக்கப், உதவி ஆய்வாளர் அர்ஜுனன், எஸ்டேட் கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
ஒரே நாளில் 6 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியபோதிலும், அதுதொடர்பான எந்த தகவலும் வெளியிடவில்லை. கடந்த மாதம் 27ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தகவல் பெற வேண்டும் என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணைய ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 48 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றதாகவும், எலக்ட்ரானிக் எவிடன்ஸ் மற்றும் செல்போன் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தகவல் பெற வேண்டியுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 700க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களையும், மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட ஆவணங்களையும் அடிப்படையாக வைத்து தற்போது மேலும் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.