Mozhi por Thiyagigal Day: ’தமிழுக்காக நெருப்புக்கு உடலை தந்த வீரன்!’ கீழப்பழூர் சின்னசாமி நினைவுநாள் இன்று!
”சின்னச்சாமியின் மரணம் தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிரான அனலை கக்கத் தொடங்கியது”

ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதியான இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போராட்டம் இந்திய விடுதலைக்கு முன்னரே தொடங்கிவிட்டது. 1938ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி தமிழ்நாட்டில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்கி உத்தரவிட்டார்.
ராஜாஜியின் இந்த உத்தரவுக்கு எதிராக தனித்தமிழ் இயக்கங்களும், பெரியாரும் கடும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை எதிர்த்து போராடிய நடராசன், தாளமுத்து ஆகியோர் உயிர்நீத்த நிலையில் பிரச்னை பூதாகரமானது. எதிர்ப்பை புரிந்து கொண்ட ராஜாஜி அரசு இந்தி கட்டாய பாட அறிவிப்பை கைவிடுவதாக அறிவித்தது.
நாடு விடுதலை பெற்றதற்கு பின்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுக்கும் பணிகள் தொடங்கிய போது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மொழியை கற்க 15 ஆண்டுகள் அவகாசம் அளித்து பின்னர் இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வரலாம் என்று முடிவு செய்யப்பட்டது.