தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Jio Has Invested Over Rs. 35,000 Crores In Tn, Said Mukesh Ambani

Mukesh Ambani: தமிழகத்தில் ரிலையன்ஸ் செய்யப்போகும் முதலீடுகள் என்ன? - முகேஷ் அம்பானி விளக்கம்

Karthikeyan S HT Tamil
Jan 07, 2024 01:47 PM IST

Global Investors Meet 2024: தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் குழுமம் செய்யப்போகும் முதலீடுகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி விளக்கம் அளித்துள்ளாா்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு இன்று (டிச.07) தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா். இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. புதிய நிறுவனங்கள் தொடங்கவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகாிக்கவும் உலகின் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புாிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, "தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது." என்று தொிவித்துள்ளாா்.

பல ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் பெருமிதத்துடன் பங்குதாரர்களாக இருப்பதாகக் கூறிய முகேஷ் அம்பானி, தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1,300 சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்துள்ள ஜியோ நிறுவனம், தமிழ்நாட்டில் 35,000 கோடி ரூபாய் முதலீட்டில், டிஜிட்டல் புரட்சியின் பலன்களை மாநிலத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்தில் 35 மில்லியன் சந்தாதாரர்களுக்கு கொண்டு வருகிறது. உலகில் எங்கும் இல்லாத வகையில் டிசம்பாில் ஜியோ 5ஜி வேகமான வெளியீட்டை நிறைவு செய்தது. இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நான்காவது தொழில் புரட்சி தொழில்நுட்பங்களின் பலன்களை தமிழகம் அறுவடை செய்ய முடியும். இது தமிழகத்தின் பொருளாதாரத்தை மேலும் துரிதப்படுத்தும்." என்றாா்.

முன்னதாக மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சா் பியுஷ் கோயல், "நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, நாட்டின் பொருளாதார உயர்வில் பெண்கள் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரர் டி.ஆர்.பி.ராஜா இருவரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர்." எனத் தொிவித்திருந்தாா்.

WhatsApp channel

டாபிக்ஸ்