Jallikattu 2024: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! உதயநிதி செய்த சம்பவம்! பரபரக்கும் களம்!
”Alankanallur Jallikattu 2024: அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் எந்த உயிரிழப்புகளும் ஏற்படாதவாறு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது”
காணும் பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று முன் தினமும், பாலமேட்டில் நேற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாடிவாசலில் இருந்து முதலில் மூன்று காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் தேர்வு செய்யப்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 1200 காளைகளும், 800 வீரர்களும் தேர்வு செய்யபப்ட்டுள்ளனர்.
இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பசு கன்றுகள், பிரோ, கட்டில், மெத்தை, தங்கக்காசுகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
10 சுற்றுக்கள் வரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 60 வீரர்கள் களமிறங்குவர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடிக்கும் 2 வீரர்கள் அடுத்த சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதியாக அனைத்து சுற்றுகளிலும் அதிக காளைகளை பிடித்த முதல் 2 பேர்களை தேர்வு செய்து இறுதி சுற்றில் கலந்து கொள்வார்கள்
போட்டியின் போது காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக 90 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், 70 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டுபோட்டிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் எந்த உயிரிழப்புகளும் ஏற்படாதவாறு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.