Income tax raid: பிரபல உணவு பொருள் விநியோக நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் இயங்கி வரும் பிரபலமான பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருள் இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, மண்ணடி, மடிப்பாக்கம், தி. நகர், உள்பட பல இடங்களில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து வரி எய்ப்பு செய்திருப்பதாக வந்த புகாரை எடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவு பொருள்களை இறக்குமதி செய்து விநியோகம் செய்ததில் பல கோடி ரூபாய் வரி எய்ப்பு செய்திருப்பதாக சில நிறுவனங்களின் மீது தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை புதுவண்ணார்பேட்டை டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அண்ட் கோ, மண்ணடி தம்பு செட்டி சாலையில் இயங்கி வரும் அருணாச்சலம் இன்பெக்ஸ் நிறுவனம், எஸ் . கே. எஸ். இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.
அதேபோல் தண்டையார்பேட்டை பகுதியிலுள்ள பெஸ்ட் டால் மில், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா ட்ரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களின் சொந்தமான இடங்கள் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் இன்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனை மேற்கொள்ளப்படும் நிறுவனங்கள் அரசின் பொது விநியோக திட்டத்துக்கு சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்பட உணவு பொருள்களை விநியோகம் செய்து வருகின்றன. இவற்றில், அருணாச்சலம் இம்பேக்ஸ் மற்றும் இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் ஆகிய நிறுவனங்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு உணவு பொருள்களை சப்ளை செய்த நிறுவனம் என கூறப்படுகிறது.
முன்னதாக, பொங்கல் பண்டிகையின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம், புளி உள்பட பொருள்கள் தரமற்றதாக இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தன. அப்போது, பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் செய்ததில், ரூ. 500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக எதிர் கட்சிகளும் குற்றம்சாட்டை முன் வைத்தன.
இதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு இந்தோனேஷியாவிலிருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாமாயில், விற்பனை செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும், முறையான வரி கட்டாமல் பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.