Pramod Kumar IPS: 'பாசி நிறுவன உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கு' ஐஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் சரண்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pramod Kumar Ips: 'பாசி நிறுவன உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கு' ஐஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் சரண்!

Pramod Kumar IPS: 'பாசி நிறுவன உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கு' ஐஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் சரண்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 27, 2023 12:36 PM IST

செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜிக்கு உத்தரவிட்டார். பிரமோத்குமார் ஐபிஎஸ் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்

ஐ.ஜி பிரமோத்குமார்
ஐ.ஜி பிரமோத்குமார்

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டில் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் அந்த நிறுவனம் பணம் வசூல்  செய்தது. நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அளித்தனர். திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.  பின்னர் வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில் பாசி நிறுவனம் 58,571 பேரிடம் 930.71 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022 ம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஐஜி பிரமோத்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு

இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை கடத்தி ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஐ.ஜி. பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது. 

கடந்த 2013-ம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யபடாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், அதற்கு முன்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 2 முறை குற்றச்சாட்டு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டும், ஐ.ஜி. பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு கடந்த 25 ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர, மற்ற 4 பேரும் ஆஜராகினர். பிரமோத்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திர மோகன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஏற்கெனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிரமோத்குமார் ஆஜராகாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

ஐஜிபிரமோத்குமார் நீதிமன்றத்தில் சரண்

இதைத்தொடர்ந்து, கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தற்போது கரூரில் செயல்பட்டு வரும் செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜிக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பிரமோத்குமார் ஐபிஎஸ் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.