HT Flop Story: ’வித்தியாசமான தொழில் செய்தால் வெல்ல முடியுமா?’ Pets.com தோற்ற கதை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Flop Story: ’வித்தியாசமான தொழில் செய்தால் வெல்ல முடியுமா?’ Pets.com தோற்ற கதை!

HT Flop Story: ’வித்தியாசமான தொழில் செய்தால் வெல்ல முடியுமா?’ Pets.com தோற்ற கதை!

Kathiravan V HT Tamil
Dec 10, 2023 06:50 AM IST

”HT Flop Story: மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங்கில் மட்டும் கவனம் போதும் தொழிலில் வெற்றி அடைந்து விடலாம் என நினைப்பவர்களுக்கு Pets.com வீழ்ச்சி ஒரு முன் உதாரணம்”

Pets.com தோற்ற கதை
Pets.com தோற்ற கதை

வித்தியாசமான தொழில் செய்கிறேன் என்ற பெயரில் சந்தையின் கவனத்தை ஈர்த்த Pets.com உச்சிக்கு சென்ற வேகத்தில் தொப்பென்று விழுந்த சோக கதையை ஒவ்வொரு தொழில்முனைவோரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

டாட் காம்கள்

90களின் பிற்பகுதியில் டாட் காம்கள் வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. அமேசான் என்ற இ-காமர்ஸ் நிறுவனம் அசூர பாய்ச்சலில் அமெரிக்காவை கிரங்கடித்துக் கொண்டிருந்தது. 1994ஆம் ஆண்டு Pets.com என்ற டொமைனை கிரெக் மெக்லெமோர் என்ற தொழில் முனைவோர் பதிவு செய்திருந்தார். 1998ஆம் ஆண்டு Pets.com ஜூலி வைன்ரைட்ஸ் என்பவரால் வாங்கப்பட்டது.

Pets.com ஆனது செல்லப்பிராணிகளின் விநியோகத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, இதன் மூலம் செல்லப்பிராணிகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் முதல் பொம்மைகள் வரை அனைத்தையும் வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் ஆன்லைன் வணிகத்தை செய்து வந்தது.

ஏற்றமோ ஏற்றம்!

நிறுவனத்தின் தொடக்கமானது டாட்-காம் ஏற்றத்துடன் ஒத்துப்போனது, இந்த காலகட்டத்தில் இணையம் சாரந்து உருவாக்கப்பட்ட வணிகங்கள் உச்சம் நோக்கி சென்றன. இதன் வளர்ச்சியை கண்ட அமேசான் நிறுவனம் அந்நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கி முதலீடு செய்தது. 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிறுவனம் நிதி திரட்டியது.

பங்கு சந்தை முதல் படி இறங்கியது வரை! 

’சாக் பொம்மை' மூலம் Pets.com செய்த விளம்பர பரப்புரைகள் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றன. சாக் பொம்மை சின்னம் விரைவில் சகாப்தத்தின் சின்னமாக மாறியது. என்னத்தான் வெளியில் பளபளப்பாக நிறுவனம் காட்சி அளித்தாலும், தனது முதலீடுகளை அந்நிறுவனம் எரித்துக் கொண்டே வந்தது. முதலீடுகளை அந்நிறுவனத்தால் லாபமாக மாற்ற முடியவில்லை. 2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க பங்குச்சந்தையான ‘NASDAQ’ பங்குச் சந்தையில் 82.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை Pets.com திரட்டியது.

இருப்பினும், டாட்-காம் பபுள் ஆனது 2000-களின் முற்பகுதியில் வெடித்தது, பங்குச் சந்தையில் நில அதிர்வு வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. IPO எனப்படும் பொதுப்பங்கு முதலீடு மூலம் கணிசமான மூலதனத்தை திரட்டிய போதிலும் அதே ஆண்டு நவம்பர் மாதம் Pets.com இழுத்து மூடப்பட்டது.

Pets.com தோல்விக்கான காரணங்கள்!

  • பொருட்களை குறைந்த லாப வரம்பிற்குள் வைத்து விற்பனை செய்தாலும் அதனை ஷிப்பிங் செய்யும் செலவுகள் அதிகமாக இருந்தது. இது Pets.com உடனடி லாபத்தை அடைவதை தாமதமாக்கியது.
  • வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில், Pets.com பல தயாரிப்புகளை குறைவான விலைக்கு விற்றது நிறுவனத்தின் பெரும் இழப்புகளுக்கு வழிவகுத்தது. இந்த நிலையற்ற விலை நிர்ணய உத்தி அவர்களின் நிதி ஆதாரங்களை காலி செய்ததுடன் இறுதியில் அவர்களின் அழிவுக்கும் வழி வகை செய்தது.
  • இந்த நேரத்தில் செல்லப்பிராணிகளுக்கான ஆன்லைன் விற்பனை சந்தையில் போட்டியாக வந்த Petstore.com, Petopia.com, PetPlanet.com போன்ற நிறுவனங்கள் மேலும் சந்தையை சவால்கள் மிகுந்ததாக மாற்றின. 
  • இந்த போட்டியாளர்களிடம் இருந்து Pets.com தன்னை வேறுபடுத்திக் கொள்ளவும், நிலையான சந்தை பங்கைப் பெறவும் மிக கடுமையாக போராட வேண்டிய நிலை இருந்தது.
  • மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங்கில் Pets.com அதிக அளவில் செலவு செய்தாலும், நிறுவனத்திற்கு என தெளிவான இலக்குள் நிர்ணயிக்கப்பட்டாது இதன் பின்னடைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங்கில் மட்டும் கவனம் போதும் தொழிலில் வெற்றி அடைந்து விடலாம் என நினைப்பவர்களுக்கு Pets.com வீழ்ச்சி ஒரு முன் உதாரணம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.