HT Exclusive : பாடாய்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை; புலம்பும் ஆசிரியர்கள் – கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர கோரிக்கை!
HT Exclusive : மே 22ம் தேதி முதல் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும் என்றார்கள். திரும்பவும் அதேபோல அழைத்தால் சிலரைத் தவிர யாரும் சிறப்பு வகுப்புக்கு வருவதில்லை. அலைபேசி கதையும் வழக்கம்போல்,
இந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மறுதேர்வுக்கு ஒரு வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தேர்ச்சியடையாத மாணவர்களில் ஓரிருவர் தவிர பெரும்பாலானோர், பள்ளிக்கு வந்து மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இறுதிநாள் நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாணவர்களைத் தொலைபேசியில் அழைத்தால், அலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்களின் எண்களை ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள்.
வேறு அலைபேசியில் அழைத்தால் குரல் கேட்டவுடன் கட் செய்து விடுகிறார்கள். பெற்றோர்க்கு அழைத்தாலும் எடுப்பதில்லை, பொறுப்பான பதிலில்லை. மாணவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது என்பார்கள். மாணவர்கள் வீட்டுக்குப் போனாலும் அவர்கள் வீட்டில் இருப்பதில்லை.
இந்நிலையில் அந்தந்த வகுப்பாசிரியர்களே மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டணத்தைக் கட்டி விண்ணப்பித்து விட்டார்கள். அடுத்தது மறுதேர்வு எழுதும் மாணவர்கள் இந்தமுறை தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் கடுமையான உத்தரவு போட்டார்கள். தேர்ச்சிபெறவில்லை என்றால் 17a, 17 b கீழ் நடவடிக்கை எடுப்போம், ஷோகாஸ் நோட்டிஸ் அளிப்போம், மெமோ கொடுப்போம் என்று மிரட்டுகிறார்கள்.
மே 22ம் தேதி முதல் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும் என்றார்கள். திரும்பவும் அதேபோல அழைத்தால் சிலரைத் தவிர யாரும் சிறப்பு வகுப்புக்கு வருவதில்லை. அலைபேசி கதையும் வழக்கம்போல்,
எங்களை என்னச் செய்யச் சொல்றீங்க என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள். மாணவர்களுக்கு படிக்க விருப்பமில்லை என்கிறார்கள். எவ்வளவு அறிவுரை கூறினாலும் பயனில்லை. அவர்கள் வீட்டுக்குச் சென்றாலும் ஆள் இருப்பதில்லை. வந்த சில மாணவர்களை வைத்து சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தினமும் இந்தப்பக்கம் மார்க்ஷீட், டிஸி வழங்க வேண்டும். அந்தப்பக்கம் ஆறு முதல் 11ம் வகுப்பு வரை சேர்க்கை நடத்த வேண்டும். பின்பக்கம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என நடந்து கொண்டே இருக்கிறது.
எந்த ஆசிரியருக்காவது தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஃபெயில் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்குமா? அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்றுதானே எண்ணுவார்கள். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் கல்வி அதிகாரிகள் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாது. அதற்காகவாவது நூறு சதவீதம் தேர்ச்சி தர வேண்டும் என்று கடுமையாக உழைப்போம்.
சில மாணவர்கள் தேர்றாமல் போவதற்கு பல சமூக பொருளாதார, அரசியல் காரணங்கள் உள்ளன. பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மையும் ஒரு காரணம். இவற்றையெல்லாம், கல்வித்துறை கணக்கில் கொள்ளாது, அவற்றைத் தீர்ப்பதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்காமல், ஆசிரியர்களை மட்டும் கல்வி அதிகாரிகள் 17a, 17b, மெமோ, ஷோகாஸ் நோட்டிஸ் அளிப்பேன். சம்பளத்தை நிறுத்தி வைப்பேன் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். சுயமரியாதை இல்லாமல் அடிமை மாதிரி இருக்க வேண்டியுள்ளது.
பொதுத்தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்வது, மாவட்டத்திற்கு மாவட்டம், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் மாறுபடுகிறது. என்னதான் பொதுவான விடைக் குறிப்புகளை அரசு அளித்தாலும், விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியரின் தனிப்பட்ட மனப்பான்மை பெரும்பங்கு வகிக்கிறது.
எங்கள் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் வேறொரு மாவட்ட விடைத்தாள் வரும் அப்போது அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என்னவென்றால், ஒரு பாடத்தில் 25 மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவர் பெற்றிருக்கிறார் என்றால் அங்கங்கு ஒரு மதிப்பெண், அரை மதிப்பெண் போடு 35 ஆக்கிவிட வேண்டும்.காலங்காலமாக இதுதான் நடக்கிறது. ஆனால் எங்கள் மாவட்ட விடைத்தாள்கள் வேறு மாவட்டதிற்குச் சென்றால் அங்கிருக்கும் ஆசிரியர்கள் கறாராக மதிப்பீடு செய்கிறார்கள்.
உதாரணமாக எங்கள் மாணவர்கள், 29, 34 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறாதவர்கள் நிறைய உண்டு. இதெல்லாம் கல்வி அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் ஆசிரியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதே அவர்களுக்கு வாடிக்கை. இப்படிக் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்துகொண்டால், வெறுப்பும் சோர்வும்தான் ஏற்படுகிறது. இந்த மனநிலையோடுதான் இந்தக் கல்வி ஆண்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
Orientation Training ஆசிரியர்களுக்கு நடந்தது. அதில் கல்வி அதிகாரி சுமார் இரண்டு மணி தொடர்ந்து திட்டினார். இரண்டு மணி நேரமும் சம்பளம் வாங்கறீங்கயில்ல, சம்பளம் வாங்கறீங்கயில்ல? ஏன் பெயிலானார்கள்? இதே திட்டு. 17a,17 b பாயும். ஷோகாஸ் கொடுப்பேன், ஷோகாஸ் கொடுப்பேன் இதே பல்லவி. ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் பாடத்தில் 90 சதவீதத்துக்கு மேல்தான் தேர்ச்சி அளித்திருக்கிறோம். அதற்குச் சிறு பாராட்டுகூட இல்லை.
புதியதாக பள்ளிக் கல்வி இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இதில் தலையிட வேண்டும். ஆசிரியர்களுக்குப் பல்வேறு பயிற்சி அளிக்கும் கல்வித்துறை, கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?, எப்படித் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும், கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் , இனிய சொற்களைப் பயன்படுத்துவது போன்ற தலைமைத்துவ பயிற்சியை நடத்த வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களிடம் அன்பாகவும், பெற்றோர்கள் போலவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் கல்வித்துறை, அந்தத்துறை அதிகாரிகளும் அவ்விதமே ஆசிரியர்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். தேர்வு முறையில் மாற்றம் வேண்டும். நூறு சதவீத தேர்ச்சியை நோக்கி ஓடும் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.
மாணவர்களின் தேர்ச்சி என்பது ஒரு கூட்டு முயற்சி. ஆசிரியர்களின் மீது மட்டும் பெரும்பாரத்தை தூக்கி வைப்பது ஆபத்தானது. அந்தந்த மாவட்ட விடைத்தாள்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர்களே மதிப்பீடு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும். ஆசிரியர் தொழில் எனக்கு சரிப்படவில்லை. விருப்ப ஓய்வில் செல்வதுதான் ஒரே வழி.
இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்