HT Explainer: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்-அப்பில் டிக்கெட் வாங்குவது எப்படி?
Chennai Metro Rails: 8300086000 என்ற எண்ணிற்கு hi என்று மெசேஜ் அனுப்பினால் உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளுமாறு மெசேஜ் வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் போக்குவரத்துக்கு பிரபலமாக இருந்துவரும் மெட்ரோ ரயிலில் இனி பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் ஐதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பு சென்னை மெட்ரோ.
தினமும் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி அலுவலகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பிற தேவைகளுக்கும் எளிதாக சென்று வருகின்றனர்.
மெட்ரோவில் தினமும் பயணிப்பவர்கள் ரீசார்ஜ் செய்யும் வகையில், ஏடிஎம் கார்டு வடிவில் இருக்கும் மெட்ரோ பாஸ் எடுத்து பயணிக்கும் வசதி ஏற்கனவே இருக்கிறது.
அந்த அட்டையின் பின்புறம் இருக்கும் கோடு மூலம் டிக்கெட் கட்டணம் நுழைவாயிலில் கழித்துக் கொள்ளப்படும்.
இதேபோல் மெட்ரோ ரயிலைவிட்டு வெளியே வரும்போதும் அந்த அட்டையை வெளியேறும் கதவில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்கேனரில் காண்பித்தால் கதவு திறந்து வழிவிடும்.
இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிக்கெட் கவுண்டரும் செயல்படுகிறது.
இந்நிலையில், வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் நோக்கில் வாட்ஸ்-அப் வாயிலாக எளிதாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அறிமுகம் செய்துள்ளது.
8300086000 என்ற எண்ணிற்கு hi என்று மெசேஜ் அனுப்பினால் உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளுமாறு மெசேஜ் வருகிறது.
தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதைத் தொடர்ந்து, பயணச்சீட்டை பெறுக, அருகிலுள்ள நிலையம், இதர முறைகள் என்ற விருப்பத் தேர்வுகள் காண்பிக்கின்றன.
அதைப் பயன்படுத்தி நீங்கள் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை கண்டறிய உங்கள் தற்போதைய லெக்கோஷனை அனுப்பினால் அதற்கு அருகில் உள்ள மெட்ரே நிலையங்கள் காண்பிக்கின்றன.
சாட்பாட் அடிப்படையில் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி எளிதாக டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
பேடிஎம், ஏர்டெல் ஆகிய செயலிகளிலும் விரைவில் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்போவதாக சென்னை மெட்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கியூஆர் வைக்கப்பட்டிருக்கும். அதை ஸ்கேன் செய்தும் நீங்கள் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம்.
வாட்ஸ்அப்பில் 6 டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சியின் மேலும் சென்னை மெட்ரோவில் மேலும் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்